திருப்பூர், ஆகஸ்ட் 28:
உலகப் புகழ் பெற்ற பனியன் உற்பத்தி மையமான திருப்பூர், தற்போது கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ளது. அமெரிக்கா 50% கூடுதல் வரி விதித்ததன் விளைவாக தயாரான 35 லட்சம் பனியன் ஆடைகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடக்கின்றன.
திருப்பூரிலிருந்து ஆண்டுதோறும் ரூ.46,000 கோடி மதிப்பிலான பனியன் ஆடைகள் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதில் 30% அளவிலான சுமார் ரூ.15,000 கோடி மதிப்புள்ள ஆடைகள் அமெரிக்கா நோக்கி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், விலை குறைவான ஆடைகள் மட்டுமே அமெரிக்காவிற்கு அதிகம் அனுப்பப்படும் நிலையில், அதிபர் ட்ரம்ப் 50% கூடுதல் வரி விதித்ததால், ரூ.100 மதிப்புள்ள ஆடை அமெரிக்காவில் ரூ.150 ஆக விற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், அங்குள்ள வர்த்தகர்கள் இந்தியாவில் கொடுத்திருந்த ஆர்டர்களை பெறுவதில் பின்வாங்கி வருகின்றனர்.
ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட 10 லட்சம் ஆடைகள், தயாராகிக் கொண்டிருக்கும் 25 லட்சம் ஆடைகள் என மொத்தம் 35 லட்சம் பனியன் ஆடைகள் தற்போதைய சூழலில் தேங்கி கிடக்கின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ.500 கோடியாகும். அமெரிக்க வர்த்தகர்கள், “வரி நிலை தெளிவாகும் வரை பொருட்களை பெற இயலாது” என்று கூறியிருப்பதாலும், ஏற்றுமதியாளர்களின் முதலீடுகள் முடங்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பனியன் உற்பத்தி செய்து வரும் சண்முகம் என்பவர் கூறியதாவது: “கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். தற்போது வரி காரணமாக வர்த்தகர்கள் ஆடைகளை பெறாமல் நிறுத்தி வைக்குமாறு தெரிவித்துள்ளனர். நான் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளேன். அதில் பெரும்பங்கு கடன். நிலைமை மோசமடைந்து, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் தவிக்கிறோம். விரைவில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சிறு, குறு நிறுவனங்கள் உயிர் பிழைக்கும்.” என அவர் வேதனை தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகர்கள், இந்திய மாற்றுக்கு பதிலாக வங்கதேசம், வியட்நாம், ஜோர்டான் போன்ற நாடுகளில் இருந்து பனியன் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு பிற நாடுகளிடமிருந்து சப்ளை தொடங்கினால், மீண்டும் திருப்பூர் மீது நம்பிக்கை ஏற்படுத்துவது கடினமான நிலையை உருவாக்கும் என ஏற்றுமதியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
திருப்பூரின் ஏற்றுமதியாளர்கள், “அரம்ப கட்டத்திலேயே 500 கோடி வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான தொழில்கள் மூடப்படும் சூழல் வரும். எனவே, அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கு மத்திய அரசு தாமதமின்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துகின்றனர்.