சத்தீஸ்கர், ஆகஸ்ட் 28:
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (45) என்பவர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில் கடந்த 15 ஆண்டுகளாக கட்டட பொறியாளராக பணியாற்றி வந்தார். அவர் தனது மனைவி பவித்ரா (38), மகள்கள் சௌத்தியா (8), சௌமிகா (6) ஆகியோருடன் அங்கேயே வசித்து வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்கு வர அழைத்ததைத் தொடர்ந்து, புதன்கிழமை ராஜேஷ்குமார் தனது மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊர் நோக்கி பயணமானார். அப்போது சுக்மா அருகே டர்பந்தனா என்ற இடத்தில் மழையால் திடீரென வெள்ளம் ஏற்பட்டதால், அவர்கள் பயணித்த கார் பெருவெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது.
இச்சம்பவத்தில் ராஜேஷ்குமார், பவித்ரா, சௌத்தியா, சௌமிகா ஆகிய நால்வரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வு நடத்தப்பட்டுள்ளன. பின்னர் சடலங்கள் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான பாரண்டப்பள்ளி கிராமத்துக்குக் கொண்டு வர உள்ளது.