சென்னை, அக்டோபர் 31:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் இயல்பை விட அதிகளவில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, மொத்த மழைப்பொழிவு அளவு 36 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை இந்தியப் பிரதேசங்களிலிருந்து முழுமையாக விலகியது. அதன் சில நாட்களிலேயே வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. இதனையடுத்து, வங்கக் கடலில் தீவிர புயலாக உருவான ‘மோந்தா’ புயல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை வரை கொடுத்தது.
அந்த புயலினால் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட தெற்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களில் பரவலான மழை ஏற்பட்டது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய முதல் 15 நாள்களில் மாநிலம் முழுவதும் மழைப்பொழிவு அளவு குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்தது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிபர அறிக்கையின் படி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அக்டோபர் மாதம் 1 முதல் 31 வரையிலான இயல்பான மழைப்பொழிவு அளவு 171 மில்லிமீட்டர். ஆனால் இந்தாண்டு அதே காலப்பகுதியில் மொத்தம் 233 மில்லிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதனால் இயல்பை விட 36 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
வானிலை மையத்தினர் மேலும் கூறுகையில், வடகிழக்குப் பருவமழையின் அடுத்த கட்ட நடவடிக்கையாக நவம்பர் மாதத்திலும் தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமழை முதல் கனமழை வரை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து வடகிழக்குப் பருவமழை இயல்பை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிடுகிறது