விருதுநகர், ஆகஸ்ட் 09:
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில், சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம், வெடி மருந்துகளை உராய்வு செய்தபோது திடீரென தீப்பிடித்து வெடிவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் நடந்த 4 வெடி விபத்துகளில் 16 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.