சென்னை, அக்டோபர் 18:
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக மக்கள் பெருமளவில் புறப்பட்டதால், மாநிலம் முழுவதும் பேருந்து நிலையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.
தமிழக போக்குவரத்துத் துறையின் தகவல்படி, கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் 3.5 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4,067 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சென்னை கோயம்பேடு, தாம்பரம் மற்றும் மாதவரம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலிருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், ஈரோடு போன்ற நகரங்களுக்கு மக்கள் தொடர்ந்து புறப்பட்டனர்.
பொது போக்குவரத்துடன் சேர்ந்து, மக்கள் பெரும்பாலானோர் சொந்த வாகனங்களிலும் புறப்பட்டதால், சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுகுறித்த இணையதள பதிவில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் வெள்ளிக்கிழமை (அக். 17) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 1,975 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.
மேலும், வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிவரையில் 6,920 பேருந்துகளில் 3,59,840 பயணிகள் பயணித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர்’ என்று குறிப்பிட்டுள்ளது.