காஸா, அக்டோபர் 13:
2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன் இரண்டு வருடமாக நீடித்து வருகிறது. இந்த போரின் முடிவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டன.
டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் படி கடந்த சில நாள்களுக்கு முன்பு, மூன்று நாட்களின் பேச்சுவார்த்தைக்கு பின், 2025 அக்டோபர் 10-ஆம் தேதி முதல் இருபுறமும் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
இதன் தொடர்ச்சியாக, காஸா போர் நிறுத்தத்திற்கு எதிரொலியாக, ஹமாஸ் அமைப்பினால் கைதியாக இருந்த அனைத்து 20 பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேலிய பணயக்கைதிகளுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் பாலஸ்தீன கைதிகளின் விடுதலையை சுலபமாக்கும் பல கட்ட நடவடிக்கைகள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா விடுவிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு தனிப்பட்ட வாழ்த்துச் செய்தி அனுப்பி, மீண்டும் வருக என வரவேற்றனர்.