தஞ்சாவூர், மார்ச் 04:
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று தஞ்சாவூர் அருகே நடைபெற்றது.அதில் விஜய் பேசியதாவது: “தமிழ்நாட்டின் உண்மையான பிரதிநிதியாக நாம் இருக்கிறோம். நான் என்ன பேசினாலும் அதை திரித்து பேசுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு தீய சக்தி என்று சிறிய குழந்தைகள் கூட சொல்ல ஆரம்பித்துவிட்டனர்
தமிழ்நாட்டு அணி, டெல்லி அணி என்று சொல்கிறார்கள். கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டு அணியை டெல்லி அணியால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது, கிரிக்கெட்டில் விசில் போடுவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான். வரப்போகும் தேர்தலில் விசில் போடப்போவது நம்ம தவெகதான். தவெகதான் தமிழ்நாடு; தமிழ்நாடுதான் தவெக.. வீட்டுக்கு வீடு விஜய் என்பது இந்த தேர்தலில் 100 சதவீதம் நிரூபிக்கப்படும். அடுத்த ஜென்மத்தில் ஒரு விவசாயி குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
எனக்கு விவசாயத்தை பற்றி விவரமாக தெரியாது. மற்றவர்கள் மாதிரி டெல்டா காரன் என்று உங்கள் காதில் டால்டா ஊற்ற வரவில்லை. ஆனால் விவசாயிகள் பிரச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரியும். டெல்டா காரன் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி கவனித்தாரா? விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தது திமுக அரசு. மணல் மாஃபியா குரூப்புக்க்கு ஆதரவு அளிப்பது உங்கள் திமுக அரசுதானே. விஜய் வந்தால் நமக்கு பிழைப்பு போய்விடும் என்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து சதி செய்கின்றன. என்னை முடக்கலாம், ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை முடக்க முடியாது. திமுக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே கிடையாது.
சமீபத்தில் ஐ.நா. சபை தெரிவித்த கருத்தை, தண்ணீர் திவால் ஆகப்போகிறது என்ற தலைப்பில் தினத்தந்தி பத்திரிகையில் கட்டுரை வெளிவந்தது. இதுபோன்ற நிலைக்கு நிலத்தடி நீரை பாதுகாக்காததே காரணம். கனிம வளங்களை கொள்ளையடித்தால் வேறு என்ன நடக்கும். மணல் கொள்ளையில் ஈடுபட்டால் வேறு என்ன நடக்கும்.
மணல் மாபியா குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கூறியதே. அவர்களுக்கு ஆதரவு அளிப்பது யார், திமுக அரசு தானே. அதை இல்லை என்று சொல்ல முடியுமா. கடன் மேலே கடன் வாங்கி இந்த அரசே குப்புற படுத்துக்கொண்டது. விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல், மழையில் வீணாக போனதே. சும்மா டெல்டாக்காரன் என்று சொல்வீர்கள். பெரிய திட்டங்களை ஆட்சிக்கு வந்தவுடன் செய்யமாட்டார்கள். ஆனால், ஆட்சி முடியும்போது தொடங்குவார்கள். ஆனால், அதை முடிக்கும் முன்பு தேர்தல் வந்து அதில் தோற்றுவிடுவார்கள். நமது ஆட்சி அமைந்ததும் பெரிய திட்டங்கள் உடனே தொடங்கப்படும். 5 ஆண்டுகளில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கருத்து சொல்லிக்கொண்டு கம்பு சுற்றினால் எல்லாம் நடந்துவிடுமா. உருப்படியாக யோசிங்க. உரிய இடத்துக்கு போய் சம்பந்தபட்டவர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும்.
கடல் விவசாயிகளான மீனவர்கள் பிரச்சினைக்கு கடிதம் மட்டும் எழுதிவிட்டு மீண்டும் தூங்கப்போய்விடுவார். மத்திய அரசுக்கு உணர்வுப்பூர்வமான அழுத்தம் கொடுக்க வேண்டும். யாரும் அவர்கள் மீது கையே வைக்கக்கூடாது. அடுத்து நம்ம ஆட்சிதான். பாதுகாப்பு பக்காவாக இருக்கும். அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்கிறார்கள். 2-வது முறை ஆட்சிக்கு வந்த சரித்திரம் கிடையாது. அவரது அப்பாவாலேயே அது முடியவில்லை. வெறும் ஆறுதல் சொல்வது என்பது தெளிவான அரசியல் கிடையாது.
நம்மை சுற்றி பல சதிகள் நடக்கின்றன. ஆட்சியில் நான் இல்லை என்றால் நீ, நீ இல்லை என்றால் நான். நம்ம ரெண்டு பேரும்தான். இடையே விஜய் வந்துவிடக்கூடாது. இப்படி டீலிங் பேசி, நம் மீது பழிமேல் பழி போடுகிறார்கள். உண்மையிலேயே இப்படித்தான் நடக்கிறது. கரூர் முதல் ஜனநாயகன் படம் ரிலீஸ் வரைக்கும் இப்படித்தான் நடந்தது. ஜனநாயகன் படத்துக்கு குரல் கொடுத்தவர்களுக்கு நன்றி. வெளிப்படையாக பேசுவதால், முதல்-அமைச்சரின் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா. முதலில் கட்சிக்காரன் தூங்கவிடல, இப்போது விஜய்யும் தூங்க விடல.
நீட் தேர்வை ஒழிப்போம் என்றீர்கள். எவ்வளவு பெரிய மோசடி. இது மோசடி ஆட்சி. மோசமானவர்களில் முக்கியமானவர்கள். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா. விஜய் வேண்டுமா. இந்த சத்தத்துக்கு என்ன அர்த்தம் தெரியுமா, தீய சக்தி திமுக ஆட்சி முடியட்டும். தூய சக்தி தவெக வரட்டும். அடுத்து நாங்கள் தான் என்று சொல்பவர்கள், ஊழலே செய்யவில்லை என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியுமா. நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சி நடத்துவோம்.
இந்த நேரத்தில், நீங்கள் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சினனத்திற்கே. யாரையும் நம்பி ஏமாறமாட்டோம். இது நிஜம். என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே, உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளோடு மக்கள் இருக்கிறார்கள். உறுதியாக இருங்கள். நல்லதே நடக்கும்” என்று அவர் பேசினார்.