சேலம், நவம்பர் 07:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மகுடஞ்சாவடி அருகே தூதனூர், காட்டுவளவு பகுதியில் உள்ள கல்குவாரி நீரில் திங்கட்கிழமை, அப்பகுதியைச் சேர்ந்த பெரியம்மா (75), பாவாயி (70) ஆகிய மூதாட்டிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன. இருவரின் நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த இரட்டை கொலை வழக்கு குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) விமலா திடீர் விசாரணை உத்தரவிட்டு, துணைக்கண்காணிப்பாளர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ஆய்வாளா்கள் செந்தில்குமார் (மகுடஞ்சாவடி), ரமேஷ் (சங்ககிரி), சண்முகம் (தம்மம்பட்டி) ஆகியோர் முனைப்புடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கொலையுடன் தொடர்புள்ளவர் என சந்தேகப்பட்ட கருப்பூர், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்ற நபரை போலீசார் தீவிரமாக தேடினர். இத்துடன், இளம்பிள்ளை, இடங்கணசாலை, கே.கே.நகர் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஒருக்காமலை பகுதியில் குற்றவாளி அய்யனார் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் மற்றும் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளி பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.