கோவை, செப்டம்பர் 25:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, வருகிற அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த மாநாட்டுக்கான லோகோவும் இணையதளமும் கடந்த ஏப்ரல் மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டில் 19 நாடுகளிலிருந்து 264 பங்கேற்பாளர்களும், 30,000க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களும் கலந்துகொள்வர். இந்தியாவில் முன்னணியாக செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், மத்திய அரசின் 10 துறைகள் மற்றும் 10 மாநிலங்களின் அரசுத்துறைகளும் இதில் பங்கேற்க உள்ளன. 750க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் மற்றும் 315க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இந்த மாநாட்டில் நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஸ்டார்ட்அப் வளர்ச்சி தாழ்வாகவும் எந்தவொரு பெரிய நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போதைய அரசு முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமிப்பதன் மூலம் தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் துறையை சிறப்பாக வளர்த்துவருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தமிழகம் முன்னர் 2021-ம் ஆண்டில் மூன்றாம் இடத்தை பிடித்து, 2022-ல் சிறந்த செயல்பாட்டாளர் விருதைப் பெற்றது. தற்போது முதல் இடத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.
சில சிறு தொழிலாளர்கள் மின் இணைப்பு மற்றும் லைசென்ஸ் வாங்கும் பிரச்சனைகளை தெரிவித்துக்கொண்டு குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ள நிலையில், அன்பரசன், அது எந்தப் பகுதியில் என்பது தெரியப்படுத்துமானால், துரிதம் சரிசெய்ய நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்றும் உறுதி அளித்தார்.