தென்காசி , நவம்பர் 24:
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல்லடத்திலிருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்தும், ராஜபாளையத்திலிருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு பேருந்தும், இடைகால் அருகே இன்று காலை 11 மணியளவில் நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் 4 பெண்கள் மற்றும் ஒருவர் ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் பலர் பேருந்து இடிபாடுகளில் சிக்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டு, காயமடைந்தவர்களை வெளியே எடுத்து மருத்துவ உதவி அளித்தனர்.
காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்தின் காரணமாக சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து தென்காசி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.