சேலம், ஜூலை 28:
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி, துங்கபத்ரா ஆகியவை நிரம்பி விட்டன. இவை நீர் நிரம்பியதால், உபரி நீர் காவிரி ஆற்றில் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், குடகு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, கடந்த 25-ந் தேதிக்கு மேட்டூர் அணை இந்த ஆண்டில் 4-வது முறையாக முழுவதும் நிரம்பியது. அணையில் இருந்து தொடக்கத்தில் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் மாலை நேரத்தில் 1 லட்சம் கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது.
இதேபோல் கர்நாடக அணைகளிலிருந்தும் நேற்று இரவு தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் இன்று மாலை முதல் மேட்டூர் அணைக்கு வரவிருப்பதால் தொடர்ச்சியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி; நீர்வரத்து வினாடிக்கு 1,00,500 கனஅடியாக இருந்தது. மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி ஆறு வெள்ளப்பெருக்காக ஆர்ப்பரித்தோடுகிறது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்ட காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.