சென்னை, ஜுலை 5:
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயர் என்னை ஆட்கொண்டது!”
இன்றுகூட முரசொலியில், ‘ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழர் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!’ எனக் கவிதை எழுதியிருந்த அவர், இப்போது நம்மிடையே இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.
“தமிழ் மொழிக்காக வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்த பெருமகன் பெருங்கவிக்கோ சேதுராமனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கலைஞரால் பாராட்டப்பட்ட பெருந்தகை அவர்!
தமிழ்நாடு அரசின் கலைமாமணி, திருவள்ளுவர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பெருங்கவிக்கோ, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், நூறுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் உள்ளிட்ட படைப்புகளை தமிழுலகிற்கு வழங்கியுள்ளார்.மேலும் அவரது மறைவு தமிழுலகிற்கு பேரிழப்பாகும், அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், தமிழ் சமூகத்தினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்ளவதாக கூறியுள்ளார்.